ஜன-6, 2020ஆண்டின் தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று காலை துவங்கியது. அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு பேச அனுமதி அளிக்கப்படாததால் திமுக.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் எனக் தமிழில் கூறிய கவர்னர் பன்வாரிலால் அவர்கள் உரையை ஆங்கிலத்தில் துவக்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், பேச முயன்றார். அதற்கு பதிலளித்த கவர்னர், பிரச்னைகளை பற்றி விவாதிக்க மட்டுமே சட்டசபையை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தினார்.
இதனையடுத்து திமுக.,வினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். உரையை தொடர்ந்த கவர்னர், தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை சிறப்பாக செய்து வருகிறது.
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பிற்கு தமிழக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அமைதியான முறையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.7000 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. ரூ.563.30 கோடியில் மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காக மத்திய அரசு அனுப்பி உள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்னையை தீர்க்க தமிழக-கேரள முதல்வர்கள் சந்தித்து பேசியது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி பெண்ணையாற்று படுகையில் கர்நாடகா அணை கட்ட முடியாது. கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று சரியான நேரத்தில் ஆந்திர முதல்வர் கிருஷ்ணா நதி நீரை திறந்து விட்டதற்கு நன்றி எனவும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிட பணிகள் விரைவில் முடிவடையும்.
சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் அரசின் நலத்திட்டப் பணிகளை மக்கள் எளிதில் பெற முடியும். என்று அவர் உரையாற்றினர்.
கவர்னருடன் ஸ்டாலின் வாக்குவாதம்