புதுச்சேரி, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் போலீசார் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டு என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் நாளை இரவு புத்தாண்டை கொண்டாடுவதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு முடிந்துவிட்ட சூழல் நிலவி வருகிறது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க வாண வேடிக்கை, இசை கச்சேரி, நடனம், மது விருந்து உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளதால். புத்தாண்டை வரவேற்க புதுச்சேரியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, சுற்றுலாத்துறை இயக்குனர், தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டு எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுச்சேரிக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரை சாலையில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை இரவு கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வரும் வாகனங்கள் அனைத்தும் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் மற்றும் பழைய துறைமுக வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்ல இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடத்தில் போலீசார் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை சிறமத்திற்கு ஆளாக்க கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்காணிக்க நானே இரவு நேரத்தில் ரோந்து வருவேன் என்றார் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
முதலமைச்சர் அதிரடி உத்தரவு.
• சாமி. சார்லஸ்